ஒரு காலத்தில் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே சிறந்தது என்று நினைத்துக்கொண்டு, தனியார் பள்ளிகளில் லட்சங்களை நன்கொடையாக கொடுத்து குழந்தைகளை சேர்த்தனர்..
ஆனால் அரசுப் பள்ளிகளோ இன்று தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் வகையில் மாறியிருக்கின்றன. இதை உணர்ந்து தான் இன்றைய பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்
இந்தியாவில் அதிக அரசுப்பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுவதும் 38,000 அரசுப் பள்ளிகளும் 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு முன்னரே அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது.
மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே 34 ஆயிரத்தை தாண்டியது. தற்போது வரை 3,24,884 மாணவர்கள் அரசுபள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,793 மாணவர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்1,741 மாணவர்களும் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.