மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: மீனவர்கள், சூழலியலாளர்கள் வேண்டுகோள்

Priya
8 Views
2 Min Read

மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்​கும், சென்னை நகருக்​கும் பாதிப்பை ஏற்​படுத்​தும் மாமல்​லன் நீர்த்​தேக்க திட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என்று மீனவர்​கள், சூழலிய​லா​ளர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

சென்னை நகரின் குடிநீர் ஆதா​ரத்​தைப் பெருக்​கும் வகை​யில் கிழக்கு கடற்​கரை சாலை, நெம்​மேலி​யில் தமிழக அரசின் நீர்​வளத்​ துறை சார்​பில் ரூ.342 கோடி செல​வில் மாமல்​லன் நீர்த்​தேக்​கம் அமைக்​கப்​படு​கிறது.

இதற்கு அப்​பகுதி மீனவர்​களும், சூழலி​யாளர்​களும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​வதுடன் அத்​திட்​டத்தை கைவிட வேண்​டும் என்று அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். இது தொடர்​பாக கோவளம் பகுதி மீனவர் ஆர்​.​நா​ராயணன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மாமல்லன் நீர்த்​தேக்க திட்​டம் தொடர்​பான சென்னை ஐஐடி-​யின் சாத்​தி​யக்​கூறு அறிக்​கை​யும், நீர்​வளத்​துறை​யின் ஆய்​வறிக்​கை​யும் நடை​முறைக்கு உகந்​த​தாக இல்​லை.

இந்த நீர்த்​தேக்​கம் அமைக்​கப்​பட்​டால் ஏற்​படும் பாதிப்​பு​களை​யும் அபா​யங்​களை​யும் ஐஐடி-யோ, நீர்​வளத்​துறையோ மதிப்​பீடு செய்​ய​வில்​லை. பல தலை​முறை​களாக கடலோரப் பகு​தி​யில் வாழ்ந்து வரும் எங்​களுக்கு கடல் என்ன செய்​கிறது என்​பதை அறிய எந்த அறிக்​கை​யும் தேவை​யில்​லை.

இந்த நீர்த்​தேக்​கத்​தால் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு மட்​டுமல்ல; ஒட்​டுமொத்த சென்னை நகருக்​கும் பாதிப்பு ஏற்​படும். மழைக்​காலத்​தில் மழைநீர் கடலுக்கு செல்​வது தடுக்​கப்​படும். மழைநீர் வடிவது தாமத​மாகும். வெள்​ள நீ​ரால் சென்னை நகரமும் பாதிக்​கப்​படும். எனவே இந்த நீர்த்​தேக்க திட்​டத்தை அரசு கைவிட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

நெம்​மேலி மீனவர் மோகனா கூறும்​ போது, “பல தலை​முறை​களாக கடலோரப் பகு​தி​யில் இறால், நண்​டு​கள்பிடிக்​கும் தொழிலில் ஈடு​பட்டு வரு​கிறோம். இந்த நீர்த்​தேக்​கத்​தால் கடலோர மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் முற்​றி​லும் பாதிக்​கப்​படும்” என்​றார்.

சென்னை காலநிலை செயல்​பாட்​டுக் ​குழு தன்​னார்​வலர்​கள் விஷ்வஜா, சுப ஆகியோர் கூறும்​போது, “மீனவர்​களின் குறிப்​பாக பெண்​களின் வாழ்​வா​தா​ரம் கேள்விக்​குறி​யாகும். இதனால், சமூக, பொருளா​தா​ரப் பாதிப்​பு​கள் என தொடர் பாதிப்​பு​கள் ஏற்​படும். நீர்த்​தேக்​கம் அமைப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகளை மதிப்​பீடு செய்த சென்னை ஐஐடி, அதனால் ஏற்​படும் பாதிப்​பு​களை சொல்​ல​வில்​லை” என்​றனர்.

சென்னை இயற்​கை​யிய​லா​ளர்​கள் சங்​கத் தலை​வர் கே.​வி.சு​தாகர் கூறும்​போது, “இந்த புதிய நீர்த்​தேக்​கத்​தால் கேளம்​பாக்​கம், நெம்​மேலி, கோவளம் பகு​தி​யில் உயி​ரி-பன்​முகத்​தன்மை பெரிதும் பாதிக்​கப்​படும். அந்த பகு​தி​யில் ஆண்​டு​தோறும் 123 வகை​யான பறவை​யினங்​கள் வந்து செல்​கின்​றன.

அது​மட்​டுமின்றி ஐரோப்​பிய நாடு​கள் உட்பட உலகின் பல்​வேறு நாடு​களில் இருந்​தும் 40 வகை​யான பறவை​யினங்​கள் அங்கு வலசை வரு​கின்​றன. அந்​தப் பகு​தியை பாது​காக்க வேண்​டியது அவசி​யம். எனவே, இந்த திட்​டத்தை அரசு உடனடி​யாகக் கைவிட வேண்​டும்” என்​றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply