கோவை: 2019 ஆம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஏழு குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை முதன்மை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 2019 நவம்பரில், ஆர்.எஸ்.புரம் பூங்காவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை, ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்கி, பின்னர் மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன், கார்த்திக், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் மற்றொரு மணிகண்டன் என ஏழு பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனையுடன், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.