இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் சாதிய, மதவெறி சக்திகளை முற்றாக நிராகரித்து, தி.மு.கழக வேட்பாளர் அன்னியூர் சிவாவை மகத்தான வெற்றி பெறச் செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியால் நிலை குலைந்து போன அ.இ.அ.தி.மு.க. தேர்தல் களம் இறங்கவில்லை. இந்த நிலையில் பா.ம.க., அ.இ.அ.தி.மு.க. வாக்குகளை பெறலாம் என்ற ஆசையுடன் அலைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் சாதிய, மதவெறி சக்திகளுக்கு அரசியல் தளத்தில் இடமில்லை என்பதை விக்கிரவாண்டி மக்கள் நெற்றியடி தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.

கடந்த 2021 முதல் தமிழக மக்களின் உணர்வுகளை உள்வாங்கி நலத்திட்டங்களையும், இளைய தலைமுறையினரின் திறனை வளர்க்கும் ஊக்கம் தரும் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதுடன், வகுப்புவாத, பாசிச ஜனநாயக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடிவரும் கொள்கை உறுதி கொண்ட தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷ சாராய சாவுகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிய மலிவான செயலை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

சார்பற்ற நடுநிலை நீதி பரிபாலன முறைக்கு எதிராக பா.ஜ.க. அமலாக்க முயற்சிக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களையும், மாணவர் சமூகத்தின் மருத்துவக் கல்வி கனவை சிதைத்து வரும் நீட் தேர்வில் நடந்த ஊழல், முறைகேடுகளையும் எதிர்த்து, நீட் தேர்வு முறையில் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கோரி வருவதை ஆதரித்து தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்கிற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இடைத்தேர்தல் வழியாக வெளிப்படுத்திய விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதி மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here