விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,261 ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை துவங்கி விட்டது.

ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். நிறைவாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது.

அந்த வகையில் திமுகவின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி.
மறுபுறத்தில் பா.ம.க., மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பாமகவினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தனர். பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் பா.ம.க, மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here