சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகத்தையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இன்றைய இளைஞர்கள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடையும் தூண்களாக மாற விரும்புகிறார்கள். அதற்குத் தேவையான புதிய எண்ணங்கள் மற்றும் தீர்வுகளால் பாரதத்தின் எதிர்காலம் மட்டுமின்றி, உலகத்தின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும்.
இன்று உலகம் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தீர்வுகளை அளிக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. இளைஞர்களின் புதிய சிந்தனைகளும் தீர்வுகளும் உலகத்துக்கே வழிகாட்டும்.
இன்றைய இளைஞர்களுக்கு முன்பை விட அதிக வாய்ப்புகள் உள்ளன. 2014-ல் 750 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இன்று 1300-ஐ தாண்டி உள்ளது. கல்லூரிகளின் எண்ணிக்கை 38 ஆயிரத்திலிருந்து 52 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
‘கியூ எஸ்’ உலகத் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 14-ல் இருந்து 52 ஆக அதிகரித்துள்ளது. விளையாட்டுத் துறையிலும் பாரதம் பெரிய இலக்குகளை நோக்கி நகர்கிறது. 2030 காமன்வெல்த் போட்டிகளையும், 2036 ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள் திறமையின் மீதும் தன்னம்பிக்கையின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பாரதத்தின் எதிர்கால ‘நாயகர்கள்’ நீங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஷ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி, பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.வி.கிரிஜா சேஷாத்ரி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மன்னிப்பு
விழாவில் பங்கேற்க சுமார் 1,000 மாணவர்கள் காலை 10 மணிக்கே அழைத்து வரப்பட்டனர். ஆனால், பிரதமர் மோடியின் வருகை மாலை 3.45 மணி வரை தாமதமானதால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இதனால் சுமார் 8 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இந்நிலையில், மேடைக்கு வந்த பிரதமர் மோடி, தனது வருகை தாமதமானதற்கும், அதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கும் மன்னிப்பு கோரினார்.

