பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, 15 வகையான படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. போராடிப் பெற்ற அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு ஓசையின்றி முடிவு கட்ட தி.மு.க. அரசு சதித் திட்டம் தீட்டுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், பொது மருத்துவம், பொது அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மயக்கவியல் மருத்துவம், நெஞ்சக மருத்துவம், ஊடுகதிரியல் மருத்துவம், சமூக மருத்துவம், தடயவியல் மருத்துவம் ஆகியவை தவிர்த்த மீதமுள்ள 15 மருத்துவ மேற்படிப்புகளில் 2024-25-ம் ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாது; இனி வரும் ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்; இட ஒதுக்கீடு வழங்கப்படும் துறைகளில் கூட, 50 சதவீத ஒதுக்கீடு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு எதிரானது.

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கான காரணம் எதுவும் தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட துறை மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதால், அத்துறைகளில் மட்டும் அரசு மருத்துவர் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு இது தான் காரணம் என்றால் அது மிகவும் பிற்போக்கானது ஆகும்.

அரசு மருத்துவமனைகளின் தேவைகளுக்கு ஏற்ப, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் போதுமானது என்ற கொள்கை நிலைப்பாடு மிகவும் தவறானது ஆகும். இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற திறமையான மருத்துவ வல்லுனர்கள் இல்லாத நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும் திறமையான வல்லுனர்கள் அதிக அளவில் இருப்பதற்கு காரணம் 50 சதவீத அரசு மருத்துவர்கள் ஒதுக்கீடுதான் காரணம். தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதாகக் கூறி, இந்த ஒதுக்கீடு நிறுத்தப்பட்டால், அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் போது, உடனடியாக அந்த மருத்துவர்களை உருவாக்க முடியாது. அதனால், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு தடையில்லாமல் தொடர வேண்டும். அது தான் அறிவார்ந்த கொள்கையாக இருக்கும்.

தமிழக அரசின் மருத்துவக் கட்டமைப்பு என்பதை குறுகிய எல்லைக்குள் சுருக்கிவிடக் கூடாது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவக் கட்டமைப்பு விரிவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இருக்கும் போதிலும், அவை அனைத்திலும் அனைத்து மருத்துவத் துறைகளும் உருவாக்கப்படவில்லை. அதேபோல் வட்ட மருத்துவமனைகளில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட தொடக்க சுகாதார நிலையங்களைப் போலவே உள்ளன. அரசு மருத்துவர் ஒதுக்கீட்டின் வாயிலாக அதிக அளவில் மருத்துவ வல்லுனர்கள் உருவாக்கப்பட்டால், அவர்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவப் பிரிவுகளை உருவாக்கி பணியமர்த்தலாம். அதை விடுத்து அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டையே ரத்து செய்வது, ஒருவேளை வயிறு நிரம்பி விட்டது என்பதற்காக வயலை அழிப்பதற்கு ஒப்பானதாகும். இந்த நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக நீதிக்கு எதிரான சக்திகள் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றன. ஒரு சில ஆண்டுகளுக்கு இந்த இட ஒதுக்கீடு தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தால், அதையே காரணம் காட்டி அந்த இட ஒதுக்கீட்டை நிரந்தரமாக நிறுத்த அச்சக்திகள் முயலக் கூடும். 2017-ம் ஆண்டு இந்த வகையான இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், அதற்கு எதிராக கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி, சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி, 2020-ம் ஆண்டு முதல் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அது மீண்டும் ரத்து செய்யப்படாத அளவுக்கு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 இடங்களைக் கொண்ட ஒரு மருத்துவக் கல்லூரி போதுமானது என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்ப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றனவோ, அக்காரணங்கள் அனைத்தும் தமிழக அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கவும் பொருந்தும். எனவே, சமூக நீதிக்கு எதிரான இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here