அண்ணாமலை என்கிற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவீரன் முத்துக்கோன் வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர். வெள்ளையனுக்கு அடிபணியாமல் வாழ்ந்த முதல் வீரர் அழகுமுத்துக்கோன் தான். அவரை சிறைபிடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கூறியபோது, தன் தலையே போனாலும் காட்டி கொடுத்து துரோகம் செய்ய மாட்டேன் எனக் கூறியதாக புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார். பன்னீர் செல்வம் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கிடையாது. டிடிவி இல்லையென்றால் ஓ.பிஎஸ் கிடையாது. பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே இடித்து உடைத்திருக்கிறார். நாங்கள் அனைவரும் அதனை கோவிலாக நினைக்கிறோம். கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது.

கட்சியிலேயே இல்லாதவர் சசிகலா. அவர் எப்படி கட்சியை இணைக்க முடியும்? அது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பதற்கு சமம். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தைக் குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு கிடையாது. தமிழகத்தில் கடந்த 1 மாத காலத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்றுள்ளன. ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here