பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகின் றது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டைச சார்ந்த வீரர் மாரியப்பன் இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் மூன்றாவது முறையாக பதக்கம் வெல்லும் வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2016ல் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
இதனை தொடர்ந்து டோக்கியாவில் நடைபெற்ற 2020ம் ஆண்டு பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்த நிலையில் தற்போது வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது..
” மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.