நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில்: திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வட்டம், திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா முன்னிட்டு ஜூன் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு
தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 21ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன்29ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here