தான்தோன்றித் தனமாக, தற்குறித் தனமாக பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றியும் கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களைத் தீட்டியும் எளியோருக்கு எதிராக ஆட்சி புரிந்த பாஜக மற்றும் சங்பரிவார்களின் கொட்டத்தை அடக்கித் தற்போதைக்கு இத்தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தற்காலிகமாகப் பாதுகாத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியதிகார ஆணவத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்ட சனாதன – பெருமுலாளித்துவச் சுரண்டல் கும்பலின் இறுமாப்பை இத்தேர்தல் முடிவு நொறுக்கியுள்ளது என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்தியர்களை ‘இந்து சமூகத்தினர்’ என்றும், ‘இந்து அல்லாத பிற மதத்தினர்’ என்றும் பாகுபடுத்தித் தொடர்ந்து அரசியல் ஆதாயம் காணும் பாஜகவினரின் சதி அரசியல் முயற்சிகளை முறியடித்துள்ளனர். குழந்தை இராமருக்கு கோவிலைக் கட்டிக் கொண்டாட்டம் நடத்திய உத்தரபிரதேச மண்ணிலேயே பாஜகவுக்கு மக்கள் படுதோல்வியைப் பரிசாக அளித்துள்ளனர். அதாவது, பெரும்பான்மை இந்துச் சமூகமே பாஜகவைப் புறக்கணித்துள்ளது என்பதுதான் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மையாகும்.
இத்தகைய வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய இந்திய மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அத்துடன், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து சாதிய- மதவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், எமது கால்நூற்றாண்டுக் கனவை நனவாக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கேற்ப, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எமக்கு வெற்றி வாகை சூட்டி, மையநீரோட்ட அரசியலில் எம்மை அங்கீகரித்துள்ள அத்தொகுதிகளைச் சார்ந்த வாக்காளப் பொதுமக்கள் யாவருக்கும் எமது உளங்கனிந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
பத்தாண்டுகாலம் தேர்தல் புறக்கணிப்பு, இருபத்தைந்து ஆண்டுகள் தேர்தல் அரசியல் பங்கேற்பு என தொடர்ந்து முப்பைந்து ஆண்டுகளாக சந்தித்த பெரும் சவால்கள், எதிர்கொண்ட அடக்குமுறைகள், திட்டமிட்டு பரப்பப்பட்ட ஆதாரமில்லாத அவதூறுகள், ஒதுக்கி ஓரங்கட்டி முடக்கிட சாதியின் பெயரால் நடந்த சதிமுயற்சிகள், சகித்துக்கொள்ள இயலாத வஞ்சம் நிறைந்த வசவுகள்- இழிவுமிகுந்த வதந்திகள் என கொள்கைப் பகைவர்கள் குரூரமாகத் தொடுத்த இடையறாத தாக்குதல்கள் போன்ற யாவற்றையும் கடந்து, இன்னும் ஆறாத காயங்களோடும் ஆழமான வடுக்களோடும் நெருப்பாழியில் நீந்திக் கரை காணும் நிலையை எட்டியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற விவரிக்க இயலாத கடும் நெருக்கடிகள் நிறைந்த ஒரு நெடும் பயணத்தை வேறு எந்தவொரு இயக்கமும் கண்டிருக்க வாய்ப்பில்லை. இன்றும் அவற்றை எதிர்கொண்டு கொள்கை உறுதி குன்றாமல் வீறுநடைபோடும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக, ஊக்கமூட்டும் மாமருந்தாக இந்த மகத்தான அங்கீகாரத்தை வழங்கியுள்ள மக்களுக்கு மகிழ்வு பெருக்கோடு மனங்குளிர்ந்த நன்றியைப் படைக்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.