#ஜெய்மீ செய்த சம்பவம்- 10
பார்த்திபனுடன் வர்ஷினியை சேர்த்தபிறகு … மீண்டும் நாங்கள் மீண்டும் உற்சாக மூடுக்கு வந்து விட்டோம்..
இப்போது எங்கள் குழுவில் நான், விகாஷ், ஜெய்மீ, கிறிஸ்டீனா மற்றும் மதன் சார் மட்டுமே..
அடுத்ததாக நாங்கள் சறுக்கி விளையாடும் விளையாட்டை மேற்கொண்டோம்… பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் அந்த விளையாட்டு உண்மையிலேயே ஒரு ஆபத்தான விளையாட்டு.. அதில் படுத்துக் கொண்டு பயணித்தபோது தான் என் உடல் அந்தரத்தில் பறந்ததை உணர முடிந்தது.. வெற்றிகரமாக அந்த டாஸ்க்கும் முடிந்தது..
அதற்கடுத்து, ஒரு படகு போன்ற இயந்திரத்தில்.. பயணிக்கும் டாஸ்க்.. இந்த விளையாட்டினை விளையாடுவதற்கு எனக்கு சிறிதும் விருப்பமே இல்லை. இருப்பினும்.. இந்த முறை ஜெய்மீயின் கட்டளையால் விளையாட சம்மதம் தெரிவித்தேன்..
கிட்டதட்ட 30 நிமிடங்கள் காத்திருப்புக்குப் பின் அந்த விளையாட்டை விளையாட நாங்கள் தயாரானோம்..
அந்த பரிசல் இயந்திரத்தில் நாங்கள் ஏறி அமர்ந்தோம்.. கைகளில் பற்றிக் கொள்ள இரண்டு பிடிப்புகள்.. ஆனாலும் பயம்தான் தொற்றிக் கொண்டது..
படுமோசமான பயணமாக இருந்தது.. ஒரு கட்டத்தில் அந்த பரிசல் கவிழ்ந்து விடுமோ என்ற அளவுக்கு பயணித்தது..
அதில் ஒரு இடம் வரும்.. அதை எப்படி வார்த்தைகளால் எழுதுவது என்று தெரியவில்லை.. ஒரு சுற்று சுற்றி தலைகீழாக சுழற்றி அடிக்கும் பாருங்கள்.. மரணப்படுக்கையின் மடியில் நீங்கள் படுத்துறங்குவது நிதர்சனம்..
அந்தளவுக்கு ஆபத்தான பயணம்.. இந்த மாதிரி ஆபத்தான பயணங்களை ஏன் தான் பயன்படுத்துகிறார்கள் என்ற கோபம் வந்தது..
உங்களுக்கு தெரியாது.. என் கழுத்தெழும்புகளே உடைந்து போய்விட்டதோ எனும் நினைப்பை உருவாக்கிய பயணம் அது..
செம த்ரிலிங்கான பயணம்.. ஒரு வழியாக கீழே வந்து சேர்ந்த போதுதான்.. உயிரே வந்தது..
கீழே வந்ததும்.. நான் முறைத்தது.. ஜெய்மீயைத் தான்..
காரணம் எப்போதும் விகாஷ் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான்.. இந்த முறை இந்த சம்பவத்தை அரங்கேற்றியது ஜெய்மீ..
இப்படி மாட்டிவிட்டிட்டியே ஜெய்மீ என்றேன்.. வழக்கமான புன்னகையை பதிலாக தந்தது..
அதில் இருந்து என்னைக் கொஞ்சம் மீட்டுக் கொண்டுவர சிறிது நேரம் பிடித்தது..
அதற்கடுத்து எல்லாம் முடிந்து விட்டது.. இனி கிளம்பலாம் என முடிவெடுத்தோம்..
பின்பு விமல் அண்ணா ரேவதி அக்கா இருந்த இடத்தினை அடைந்தோம்.. அங்கு வர்ஷினி இன்னும் அழுகையை மறக்காமல் படுத்துக் கொண்டிருந்தது..
மரணத்தை கண்கூடாக பார்த்து விட்டாளல்லவா.. எப்படி அவளால் மீண்டு வர முடியும்.. எனவே அவளை சமாதானம் செய்ய முடியவில்லை..
விசாரித்ததில் அந்த மரண நொடிகளிலும் தனக்கு பசிக்கிறது என்று சொல்லியிருந்த காரணத்தால்.. முதல் வேலையாக பார்த்திபன் வர்ஷினியின் பசியை அடக்க போராடியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது..
அவர்கள் இருந்த இடத்தின் அருகிலேயே ஒரு தியேட்டர் இருந்தது.. அந்த தியேட்டர் ஒரு 3D Live தியேட்டர் என்று கூறினார்கள்..
உடனே நாங்கள் 5 பேரும் அந்த தியேட்டரை நோக்கி சென்றோம்..
இந்த தியேட்டர் அனுபவம் எனக்கு சென்னை குயின்ஸ் லேண்டில் கிடைத்திருந்தபடியால் அதற்கேற்றபடி என்னைத் தயார் செய்து கிளம்பினேன்..
உள்ளே நுழையும் வேளையில் எங்களுக்கு ஒரு கண்ணாடி வழங்கினார்கள்.. அது 3D கண்ணாடி..
அதை அணிந்து கொண்டு தியேட்டரின் இருக்கையில் அமர்ந்தோம்..
டெம்பிள் ரன் விளையாட்டை படமாக ஒளிபரப்பினார்கள்.. அதில் வரும் கதாபாத்திரம் தண்ணீரில் இறங்கும் போதெல்லாம் எங்கள் மீதும் தண்ணீர் மழையாக பொழிந்தது.. நல்ல அனுபவமாக இருந்தது..
அதை முடித்துக் கொண்டு இனி அவ்வளவு தான் என முடிவெடுத்தபடி கீழே இறங்கினோம்..
மீண்டும் டம்ளர் விளையாட்டு..விளையாடி விட்டு கிளம்பலாம் என நினைத்த வேளையில் ..
மோனிகா மேம்.. வேவ் பீச் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பித்துவிடும் கட்டாயம் அதில் கலந்து கொள்ள வேண்டும் என அன்புக் கட்டளையிட்டார்கள்..
வேறு வழி.. எல்லாரும்.. வேவ் பீச் நோக்கி நகர ஆரம்பித்தோம்..
இந்த முறை மதன் சார் வரவில்லை.. அவரும் எவ்வளவுதான் தாங்குவார்.. இந்த வயதில் அவர் எங்களோடு பயணித்ததே பெரிய விஷயம்.. நான் பயந்தமாதிரி அவர் எங்கேயும் பயம் கொள்ளவில்லை..
ஒரு வேளை பயந்திருக்கலாம்.. எங்களிடம் அவர் வெளிக்காட்டவே இல்லை.. நாங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தார்.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மதன் சார்.. வயதான இளைஞர்..
நாங்கள் வேவ் கடற்கரையை அடைந்த போது எங்கள் ஒட்டு மொத்த 7 Miles குடும்பமும் அந்த தண்ணீரில் சங்கமிக்க தயாராக இருந்தது..
மோனிகா மேம், ஜெரால்டு சார்.. அவருடைய குடும்பம், விகாஷ், விபின், நான்,பரத், நவீன், சிந்து, ஸ்வேதா, வெங்கி, நந்தினி, கிஷான் ,நிர்மலா, சந்துரு,சுப்பு, ஜேடன், காவியா, கிறிஸ்டீனா, ஜெய்மீ என எல்லாரும் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி அந்த கடற்கரையில் எங்கள் ஆட்டத்தினை ஆரம்பித்தோம்.
நல்ல சிறப்பான தரமான சம்பவமாக இருந்தது.. செயற்கையாக உருவாக்கப்பட்ட அலைகள் எங்களை நோக்கி வரும்போது ஒருவர் கைப்பற்றி ஒருவர் நின்று அலையை எதிர்கொண்டோம்..
ஒரு கட்டத்தில் அலையின் தாக்குதலோடு என்னால் நிற்க முடியவில்லை.. மூழ்கிவிட்டேன்..
அப்பறமென்ன நிர்மலா தான் என்னைத் தேடிப் பிடித்து காப்பாற்றியது..
ஒரு புதிய அனுபவம்.. நல்ல அனுபவம்.. சாம் சார்தான் இந்த அனுபவத்தை இழந்துவிட்டார்.. அவர் இந்த விளையாட்டில் ஈடுபடவில்லை.. நேராக ஹோட்டலுக்கு சென்று விட்டார் என்று தகவல் கிடைத்தது..
அதோடு ஆனந்த் கார்த்தியும் எங்கிருந்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை.. குறிப்பாக ராம் எதற்கு வந்தான்..? என்ன செய்தான்.. என்ற ஒரு விபரமும் கிடைக்கவில்லை..?
அதை முடித்துக் கொண்டு வெளியே வந்தோம்.. அடுத்த பயணம் .. ரோலர் கோஸ்ட் பயணம் என்றனர்..
இனி இவர்களோடு இருந்தால் உயிருக்கு உத்திராவதம் இல்லை என்பதை உணர்ந்தேன்.. இனிமேல் இவர்களோடு கூட்டு வைத்துக் கொள்வதென்பது.. மரணத்தோடு விளையாடுவதற்கு ஒப்பான செயல் என்பதால் அவர்களை தவிர்க்க முடிவு செய்தேன்..
யாருக்கு என்ன விருப்பமோ தெரியாது.. மோனிகா மேம்க்கு என்னை ரோலர் கோஸ்ட்டின் முன்னிருக்கையில் அமர வைத்து பார்க்க வேண்டுமென்ற விருப்பம்..
நான் இதெற்கெல்லாம் சரிபட்டு வர மாட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை..
ஆகவே உடைகளை மாற்றிக் கொண்டு அந்த குழுக்களின் கண்களில் படாத ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டேன்..
கொஞ்ச நேரம் என்னை தேடியிருப்பார்கள் போலும்.. நானும் மதன் சாரும் அதற்குள் பேருந்து இருந்த இடத்தினை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டோம்..
திட்டமிட்டபடி மாலை 6 மணிக்கு பேருந்து எங்களுக்காக தயாராக இருந்தது.. நானும் மதன் சாரும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்..
மற்றவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம்..
இந்த வாட்டர் கேம் விளையாட்டு என்பது என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக மாறியிருந்தது..
எதையெல்லாம் நான் சிறுவயதில் அனுபவிக்காமல் இருந்தேனோ.. அதையெல்லாம்..
இந்த வயதில் அனுபவத்திருக்கிறேன்.. அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..
தொடரும்-
ர- ஆனந்தன்