தமிழகத்தில் புதிதாக சுமார் 2 லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி அரசு வழங்கும் உதவி தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமாகும். இதன் காரணமாக ரேஷன் அட்டை முக்கிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் அட்டை வாங்க முடியாத நிலை இருந்தது.
மேலும் சமீபத்தில் நடைமுறைக்கு வந்த மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் மாதந்தோறும் 1000 ருபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டதை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தினந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் புதிதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மக்களவை தேர்தல் முடிவிற்கு பின் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.