வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய விண்வெளி வீரர் பியோட்ர் டுப்ரோவ் தனது சமூக வலைதள பதிவில், “அன்பு நண்பர்களே, வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியர்களுக்கு அமைதியும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறோம். காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்று, தன்னிறைவு மற்றும் வளம் நோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெத்யாயேவ், இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி ‘இந்தியா–ரஷ்யா நட்பு நீடூழி வாழ்க’ என்று வாழ்த்தினார். இந்தியா அமைதி, வளம் மற்றும் விண்வெளி ஆய்வில் மேலும் பல சாதனைகளைப் பெற வேண்டும் என்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் வாழ்த்தினர். இந்த ஆண்டு, சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் மனிதகுலத்தின் முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டதன் 65-வது ஆண்டு நிறைவாகும். இதையும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்களது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய–ரஷ்ய விண்வெளி உறவு
கடந்த 1961 நவம்பரில் யூரி ககாரின் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம், சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தியது. இந்தியாவைப் பற்றிய ககாரின் கருத்துகளை நினைவுகூர்ந்த ரஷ்ய விண்வெளி வீரர்கள், விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிந்ததாகவும், பூமியில் இருந்து பார்க்கும்போது அதைவிட அழகாக இருந்ததாகவும் தெரிவித்திருந்ததாக கூறினர். மேலும், இந்தியா ‘உண்மையான நண்பர்கள்’ வசிக்கும் நாடு என்றும் அவர் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டினர்.

