#பேய் வீடு-7
பைரைட்ஸ் பயணத்தினை நிறைவு செய்து மூச்சு விடுவதற்குள் பேய் விட்டை நோக்கி எங்கள் குழு சென்று கொண்டிருந்தது..
”ஏம்பா வாட்டர் தீம் பார்க்னு சொல்லித் தானே அழைச்சிட்டு வந்தீங்க… தண்ணீர்ல விளையாட வந்தவனை இப்படி கண்ணீர்ல மிதக்க விடலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா… ?”
மொழி தெரியாததால், தனியாகவும் செல்ல முடியாது… வேறு வழி அவர்களோடு சென்றேன்…
ஏற்கனவே இதுபோன்ற பேய் வீடு அனுபவம் எனக்கு சென்னை குயின்ஸ் லாண்டில் இருக்கிறது.. அந்த அனுபவமே எனக்கு ஷாக் கொடுத்தது…
இந்த Scary House ஐ பார்க்கும் போது.. ஷாக்குக்கே ஷாக் கொடுப்பதைப் போல இருந்தது…
எல்லாரும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.. கடவுளே என்னைக் காப்பாற்று என்று கெஞ்சினேன்…
என்னை அவர்கள் உள்ளே அனுமதிக்க வில்லை…
Wow கடவுளுக்கு காது கேட்டுவிட்டதா ?
என்ன காரணம் என்றால் என் காலில் செருப்பு இல்லை…
ஹைய்யா… வெயில் சுட்டாலும் பரவாயில்லை… போயும் போயும் இந்த பேய் வீட்டுக்குள் நுழைவதற்கு செப்பல் போடனுமா..?
நல்ல வேளையாக நானும், ஜெய்மீயும், மதன் சாரும் செருப்பு இல்லாத காரணத்தால் வாசலிலேயே நின்று விட்டோம்…
”வெளியே இருக்கிறவங்களோட செருப்பை போட்டுட்டு உள்ள வா மா” என்று கூறி என்னை உள்ளே வர வைப்பதற்கு சாம் சார் கூட முயற்சிகளை மேற்கொண்டார்…
நான் சிக்குவேனா.. மாட்டேன்.. சார்.. மாட்டேன்… சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது என்பது மாதிரி,
அந்த செருப்புகளை காவியாவிடம் கொடுக்க… அதை அணிந்தபடி காவியா உள்ளே சென்று விட்டது..
அவர்கள் அனைவரும் உள்ளே செல்வதற்கு தயாராக வரிசையில் நின்றிருந்தனர்…
வாசலில் ஆங்கில படங்களின் போஸ்டர்கள்… அத்தனையும் பேய் படங்கள்…
நானும் ஜெய்மீயும் அவைகளை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம்..
“பார்த்தியா நாம செப்பல் போடாம வந்தது எவ்வளவு நல்லதா போச்சு.. இருந்திருந்தா நம்மளையும் உள்ள கூட்டிட்டு போயிருப்பாங்க ” என என்னுடைய ஆதங்கத்தை ஜெய்மீயிடம் கூறினேன்..
”ஆமாண்ணா.. எனக்கும் இதெல்லாம் பயம் தான்” என கூற…
எங்கள் பக்கத்தில் ஜெரால்டு சாரின் மனைவி சந்திரிகா இருந்தார்..
“ஏன் மேம் நீங்க போகலையா ” என்று அவரிடம் கேட்டோம்..
“இது ரொம்ப பயங்கரமா இருக்கும்… அந்த போஸ்டர்ஸ்ல இருக்கிறதெல்லாம் வீட்டுக்குள்ள இருக்கும்.” என்றார்..
நானும் ஜெய்மீயும் ஒருவரை ஒருவர் மிரட்சியோடு பார்த்தோம்…
“வாசல்ல இருந்து உள்ள நுழையும் போதே கையை பிடிச்சி இழுப்பாங்க… முழுக்க முழுக்க இருட்டா இருக்கும்… ரொம்ப பயமா இருக்கும்… சின்ன பசங்க… இதயம் பலகீனமானவங்கலாம் இங்க அனுமதிக்க மாட்டாங்க… ” என்றார்..
இதைக் கேட்டதும் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த உணர்வு…
“எனக்கு கூட இதயம் ரொம்ப பலவீனமா இருக்கு மேம்.. அதான் நானும் போல…” என்றேன்..
ஜெய்மீ என்னைப் பார்த்து சிரித்தது..
“சரி அவங்க முடிச்சிட்டு வர்றதுக்கு 20 நிமிஷம் ஆகுமே அதுவரை இப்படியே நிற்கிறதுக்கு பதில்.. நாம வேற என்ன இருக்குனு பார்க்கலாம்” என ஜெய்மீ அழைக்க…
நானும், மதன் சாரும் ஜெய்மீயின் தலைமையில் கிளம்பினோம்…
வெயில் அங்கேயும் அதிகம் தான்…அருகில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம்..
குளுகுளுவென குளிர்ச்சியாக இருந்தது..
எதையாவது ஒன்றை வாங்கலாம் என “செருப்பு வாங்கிக்கலாமா ஜெய்மீ ?”
என கேட்டேன்..
“வேணா ண்ணா..செருப்பு வாங்கிட்டா… அடுத்து இதே மாதிரி இன்னொரு ஆபத்துல மாட்டிப்பீங்க சொல்லிட்டேன்..” என கூற..
“ஆமா ஆமா.. வாங்க கூடாது.. வேற ஏதாச்சும் வில்லங்கம் வந்துட்டா என்ன பண்றது… ” என்று கூறியவாறே..
அந்த கடைக்குள் சிறிது நேரத்தை செலவிட்டோம்.. அப்படியே…
அந்த கடையின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் வாசல் வழியாக வெளியே வந்தோம்..
வந்து பார்த்தால் தான் தெரிந்தது.. அது வெளியே செல்லும் வழி…!
“ஐய்யய்யோ… ஜெய்மீ நாம வெளியே வந்துட்டோம்… இப்ப என்ன பண்றது… வாட்டர் கேமைக் காமிக்காமலே வெளியே கூட்டிட்டு வந்துட்டேயே “என கத்த…
ஜெய்மீ என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்த ஒரு பெண் ஊழியரிடம் ஆங்கிலத்தில் பேசி.. மீண்டும் அந்த நுழைவுப் பாதையில் அழைத்து வந்ததது..
‘எனக்கு இப்பவே கண்ணக் கட்டுதே… ‘
அடுத்தென்ன மீண்டும் அந்த பேய் வீட்டின் வாசலுக்கு வந்தோம்.. இன்னும் அவர்கள் வருவது மாதிரி தெரியவில்லை…
அருகிலேயே ஒரு உயரத்தில் சுற்றும் ராட்டினம் ஒன்று இருந்தது..
’’அதை முயற்சிக்கலாமா’’ என ஜெய்மீ கேட்டது…
முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன்..
அந்த ராட்டினம் மிகவும் மெதுவாக பயணித்ததைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் போகலாம் என்றேன்..
அப்பறமென்ன… அதில் மூவரும் ஏறினோம்…
போவோமா ஊர்கோலம் என பாடியபடியே நாங்கள் ராட்டினத்தில் பயணித்தோம்..
மிக மிக மெதுவாக நேர்த்தியாக உயரப் பறந்தது…
ஒரு நடுக்கம் இல்லை… பதட்டம் இல்லை.. பயம் இல்லை… விளையாட்டென்றால் இப்படித் தானே இருக்க வேண்டும்…
ராட்டினத்தில் அமர்ந்தபடி உயரத்தில் இருந்து பார்தேன்.. Sunway Lagoon மொத்தமும் கண்களுக்குப் பரவசத்தை ஏற்படுத்தியது….
அதை முடித்து நாங்கள் கீழே வந்தோம்… பேய் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை…
சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்தனர்..
“எப்படி இருந்துச்சு” என விகாஷிடம் ஆர்வமாக கேட்டேன்..
“ஒன்னுமே இல்லண்ணா.. நாங்கதான் எல்லாரையும் பயமுறுத்துனோம்…” என்று கேஷுவலாக சொன்னான்..
அருகே இருந்த சந்திரிகாவிடம்.. ஏன் மேம் நீங்க ரொம்ப பயமா இருக்கும்னு சொன்னீங்க.. ஒன்னுமே இல்லைனு தம்பி சொல்றான்.. “
”இல்ல என்கிட்ட அப்படிதான் சொன்னாங்க.. அதான் நானும் சொன்னேன்”.. என்றார்..
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு மேம்…
அடுத்து எங்கு செல்லலாம் என பேசிக்கொண்டிருக்கும் போது… ஜேடனுக்காக மீண்டும் ஒருமுறை பைரைட்ஸ் விளையாடலாம் என்றனர்…
எல்லாரும் பைரைட்ஸை நோக்கி நடந்தனர்.. நான் எங்கு ஒளியலாம் என இடம் தேடினேன்..
இந்த முறை விகாஷ் மீண்டும் பைரைட்ஸ் விளையாட சென்று விட்டான்..
வழக்கம் போல நானும்,ஜெய்மீ ,மதன் சார்… அடுத்த விளையாட்டை நோக்கி சென்றோம்…
அப்போது தான் ‘காட்டுப்பூச்சி’ என்ற கயவன் என்னை நோக்கி வந்தான்..
-ர-ஆனந்தன்