புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கான நிதி ஒவ்வொரு பள்ளிக்கும் கல்வியாண்டின் இறுதியில் வழங்கப்படும். ஆனால், கோடை விடுமுறையில், பள்ளிகளில் ஓட்டை, உடைசல் கட்டங்களை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், எந்த வகை பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற பட்டியல் மட்டும் பெறப்பட்டது. பின், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, நிதி வழங்கவும் இல்லை; ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளவும் இல்லை.
அதனால், புதிய கல்வியாண்டில், பராமரிக்கப்படாத உள்கட்டமைப்புடன், வகுப்புகளை துவங்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், பள்ளிக்கல்வி துறையின் சார்பில், சமக்ர சிக் ஷா நிதியை வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், ஒவ்வொரு பள்ளியும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அந்தந்த உள்ளாட்சிகளின் வழியே நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என, ஏற்கனவே அரசு அறிவித்தது.
ஆனால், உள்ளாட்சிகள் தரப்பில், பள்ளிகளுக்கு தேவையான நிதியை வழங்கவில்லை என, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.