தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு என அறிவித்து அதற்கான உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாட்டிற்கான பணிகள் என அடுத்தடுத்து விறுவிறுப்பு காட்டி வருகிறார்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியும், கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. கொடியை அறிமுகப்படுத்திய பிறகு பேசிய விஜய், “இதுவரை நமக்காக உழைத்தோம் இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம். கொள்கை என்ன?, கொடிக்கான விளக்கம் என்ன? என்பதை மாநாட்டின்போது சொல்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது மாநாட்டுக்கான பணிகளை தொடங்கியுள்ளது த.வெ.க. வரும் செப்டம்பர் 22ம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விக்கிரவாண்டி டோல்கேட் அருகே இடமும் தேர்வாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாநாடு சுமார் 150 ஏக்கர் நிலத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே, விஜய் அறிவுறுத்தலின் பேரில் முதல் மாநாடு நடத்தவும், பாதுகாப்பு கோரியும் அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் தவெக கட்சியினர் இன்று கடிதம் வழங்கியுள்ளனர். அனுமதி கிடைத்த பின் மாநாட்டின் பணிகள் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here