அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

பேருந்துகளில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
“புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் சொகுசு பயணத்துக்காக முன்புற ஏர் சஸ்பென்சன் (Air Suspension) வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர், குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. படுக்கைகளுக்கு இடையே அதிகமான இட வசதியும், தடுப்பும் உள்ளன எனவும்,

ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒலி பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை வைக்கவும், சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதி உள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து அணைக்கும் வகையில் எஃப்டிஎஸ்எஸ் (FDSS)கருவி பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் கடிகராம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன” என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here