மத்திய அரசின் இடஒதுக்கீடு தொடர்பான புதிய முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில்,

“சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல் – பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும் எனவும்,

மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓபிசி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்துவரும் ‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு முழுவதும் தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட – நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here