‘நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர் சங்கம்
இது குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ சேவை இயக்குநர், மருத்துவக் கல்லூரி முதல்வர், இணை இயக்குநர் முதலிய உயர் பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் பணியமர்த்தும் புதுமையான முறையை தமிழக மருத்துவத்துறை நடத்தி இருக்கிறது.
எப்போதும் வருடா வருடம் மார்ச் மாதம் 15-ம் தேதி தகுதியான மூத்த மருத்துவர்களை கணக்கெடுத்து பதவி உயர்வுக்கான பட்டியலை (promotion panel) தயாரித்து பணி உயர்வு வழங்கப்படும். மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்களுக்கு மேற்கூறிய பட்டியலை வெளியிட்டு நேர்காணல் மூலம் பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.
ஊரக மருத்துவ சேவை இயக்குநர் பதவிக்கும் அப்படியே பட்டியலை வெளியிட்டு நேர்காணல் மூலம் நியமனம் நடைபெற்றது. இப்படி நேர்காணல் மூலம் செய்வது உடன்பாடில்லையென்றாலும், சரியான பட்டியலை வெளியிட்டு செய்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால், தற்போது மருத்துவ கல்வி இயக்குநர் பதவிக்கு முறையான பட்டியலை வெளியிடாமல் அமைச்சர் தலைமையில் பத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களை நேர்காணல் செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
ஓய்வுபெற்ற முன்னாள் கூடுதல் இயக்குநர் நேர்காணலை நடத்தியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே, இதுபோன்ற நேர்காணலை விடுத்து மார்ச் மாதம் 15-ம் தேதி கணக்கெடுத்து தகுதியான மூத்த மருத்துவர் ஒருவரை மருத்துவக் கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.
பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பதவி உயர்வுகளும் வருடா வருடம் மார்ச் மாதம் 15-ம் தேதி கணக்கெடுத்து தகுதியான மருத்துவர்களை உடனுக்குடன் நியமனம் செய்ய வேண்டும். காலம் தாழ்த்தி நடத்துவதன் மூலம் அதற்கான பலன்களை இழக்க நேரிடுகிறது. மேலும் பணியிட மாறுதல் கலந்தாய்வின்போது ஒரு வருட காத்திருப்பு காலம் பின் பற்றினால் மூத்த மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே, சீரிய முறையில் பணியுர்வு வழங்கிய பிறகே ஒரு வருட காத்திருப்பு காலம் கடைப்பிடிக்க வேண்டும் என அரசை வற்புறுத்துகிறோம்.
மருத்துவமனை கட்டிடங்கள் உபகரணங்கள் மட்டுமே அதிகப்படுத்தி தேவையான மனிதவளத்தை நியமிக்காமல், ஓர் இடத்தில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்களை மாற்று பணி நிரவல் செய்வது வருந்தத்தக்கது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

