மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரிப்பில், எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘4th ஃப்ளோர்’. ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், மர்மங்கள் நிறைந்த பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ளது.
வருகிற பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் ஆரி ஆர்ஜுனன், “இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எல்லாவற்றுக்கும் நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.
சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும். தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.
பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை. ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும், அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி. இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காகத்தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.
இங்கு வெற்றிதான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார்தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும்” என்றார்.

