தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.20) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று (செப்.20) ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று (செப்19) காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் பொன்னை அணையில் 10 செமீ, சென்னை மாதவரத்தில் 7 செமீ, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, சென்னை கொளத்தூர் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, சென்னை திரு.வி.க.நகர், புழல், வானகரம், மணலி, அம்பத்தூர், வில்லிவாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.