இந்துசமய அறநிலையத்துறையின் திருக்கோயில் சுவடித் திட்டப்பணியின் மூலம் திருக்கோயில்களில் உள்ள பழமையான அரிய ஓலைச்சுவடிகள் பரிமரித்துப் பாதுகாப்பதோடு நூலாக்கம் செய்யும் பணியும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருக்கோயில் சுவடித் திட்டப்பணிக்குழுவினர் புதிதாக 480 ஆண்டுகள் பழமையானச் செப்புப் பட்டயம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
அது குறித்து சுவடித் திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது ,
இந்துசமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் சீரிய பணியின் முன்னெடுப்பால் உருவான திருக்கோயில் சுவடித் திட்டப்பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இச்சுவடித்திட்டப்பணியின் மூலம் புதிதாக இராதாபுரம் வரகுணீச்சுரமுடைய நயினார்- கல்யாண சவுந்தரி நாச்சியார் அம்மன் திருக்கோயிலில் இருந்த செப்புப் பட்டயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
செப்புப் பட்டயத்தில் உள்ள செய்தி கோயில் கருவறையின் மேற்கு பக்க மணிமண்டபத்தின் மேல்பகுதியில் கல்வெட்டாகவும் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. செப்புப் பட்டயமும் கல்வெட்டும் கோயில் சந்திப்பூசைக்கு வழங்கப்பட்ட நிலதானம் குறித்த செய்தியைப் பேசுகின்றன என்றும் செப்புப் பட்டயமும் கல்வெட்டும் கி.பி.1534ஆம் ஆண்டில் எழுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.