சைரன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படம் வெற்றிபெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஜெயம் ரவி.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மல்டி ஸ்டார் படமான பொன்னியின் செல்வன் 2 மாபெரும் வெற்றியை ருசித்தாலும், சோலோ ஹீரோவாக அவர் நடித்த அகிலன், இறைவன் ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனால் சோலோ ஹீரோவாக எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு உள்ளார் ஜெயம் ரவி.
அதற்கு அவர் மலைபோல் நம்பி உள்ள திரைப்படம் தான் சைரன். இப்படத்தை அந்தோனி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இதுதவிர நடிகை கீர்த்தி சுரேஷும் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
சைரன் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்ததால் இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. வழக்கமாக முதல் காட்சியை ரசிகர்களுடன் சென்னையில் தான் நடிகர்கள் பார்ப்பார்கள். ஆனால் நடிகர் ஜெயம் ரவி சைரன் படத்தின் முதல் காட்சியை மதுரையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார். இதற்காக மதுரை வந்த ஜெயம் ரவி அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற ஜெயம் ரவி அங்கு சாமி தரிசனம் செய்தார். சைரன் படம் வெற்றிபெற வேண்டி பிரார்த்தனை செய்த கையோடு, அங்கிருந்து காரில் கிளம்பி சென்ற ஜெயம் ரவி, தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார். மதுரைக்கு ஜெயம் ரவி வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.