கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, பிரதமர் மோடி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வரும் 2027-2028 வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாதி அடிப்படையிலான தொழில் முறையை இத்திட்டம் வலுப்படுத்தும் என்பதால், இதனை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் திட்டமாக விஸ்வகர்மா திட்டம் உள்ளது என்றும் பெற்றோர்கள் செய்த குலத்தொழில் குழந்தைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் செயல்படுத்த மாட்டார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பள்ளியில் படித்தாலே தீட்டு என்று இருந்த நிலையில், படிக்காமல் விட்டால் தான் தீட்டு என்று கல்வியைக் கொடுக்க கிறிஸ்துவ அமைப்புகள் பள்ளிகளை திறந்து உதவின என்றும் தமிழகத்தில் ஒரு மாணவருக்கு கூட கல்வி சேரவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.