அனைத்து மாவட்டங்களில் குறள் வார விழா: மெரினா கடற்கரையில் தமிழோசை நிகழ்ச்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Priya
36 Views
2 Min Read

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, 2026-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ‘குறள் வாரம்’ (Kural Vaaram) மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த ‘Kural Vaaram Celebrations 2026’ நிகழ்வுகள், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மெரினாவில் ‘தமிழோசை’ மற்றும் முக்கிய நிகழ்வுகள்

சென்னையின் முக்கிய அடையாளமான மெரினா கடற்கரையில், வரும் ஜனவரி 10-ஆம் தேதி (சனிக்கிழமை) இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒருங்கிணைக்கும் ‘தமிழோசை’ இசை நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சியின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்ட சிறப்புப் போட்டிகள்:

  • நாட்டிய நாடகம் & இசை: சேலம், திருச்சி, தேனி மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் திருக்குறள் சார்ந்த நாட்டிய நாடகங்கள் அரங்கேற உள்ளன.
  • கல்லூரி மாணவர்களுக்கான கலைத்திருவிழா: கோவை, வேலூர், தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் குறள் சார்ந்த ஓவியம், படத்தொகுப்பு மற்றும் ஒளிப்படப் போட்டிகள் நடத்தப்படும்.
  • பட்டிமன்றம்: மதுரை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ‘திருக்குறள் நெறி’ குறித்த விறுவிறுப்பான பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளன.
  • அனைத்து மாவட்டங்களிலும்: பொதுமக்கள் பங்கேற்கும் குறள் ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் நடைபெறும்.

அரசு ஊழியர்களுக்கான ‘குறளாசிரியர் மாநாடு’

திருப்பூரில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி (புதன்கிழமை) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ‘குறளாசிரியர் மாநாடு’ மற்றும் குறள் வினாடி-வினா போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்ய, வரும் ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். இதில் முதல் 30 மதிப்பெண்களைப் பெறுவோர் திருப்பூரில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்கத் தகுதி பெறுவர். வினாடி-வினா போட்டிக்கான பாடத்திட்டங்களை அரசு வெளியிட்டுள்ள QR குறியீடு மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply