சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசு. அதனை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில்,
இது கம்யூனிஸ்டுகளின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! என தெரிந்துள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்,
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. 2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக இருந்த தோழர் சௌந்தர் ராஜன் அவர்கள் தனிநபர் மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது அனைவருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சாதிய ஆணவப்படுகொலை நடக்கிறதோ அத்தனை இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சங்கத்தின் தோழர்களும் களத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும்,படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்கவும், ஒரு நீண்டநெடிய போராட்டத்தை தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வருவதை தமிழக மக்கள் அறிவார்கள்.
எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்றுதமிழகத்தில் இனிமேல் சாதி ஆணவப் படுகொலைகள் இருக்காது என்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய வகையில் விரைவாக சட்டம் இயற்றுவதற்குரிய முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.