நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம் இப்போதுள்ள இளைய தலைமுறை மாணவர்களிடம் எடுபடாது. எனவே, அதை பற்றிய கவலை தேவையற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் ‘ நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ரவி இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை, நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

supreme court 1

அப்போது மனுதாரர் தரப்பில், மாணவர்கள் திசைதிருப்பும் நோக்கில் மாநில அரசு கையெழுத்து இயக்கம்அறிவித்துள்ளது. இதன்மூலம் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வரும் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பமும், வீண் பதற்றமும் ஏற்படும். நீட் தேர்வுக்கு தயாராகவேண்டாம் என்ற எண்ணமும் ஏற்படும். எனவே, கையெழுத்து இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

ஆனால், இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது;

நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வரும் மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற கையெழுத்து பிரச்சாரம் எல்லாம் எடுபடாது. இப்போதைய இளைய தலைமுறை மாணவர்கள் அப்பாவிகள் அல்ல. மிகவும் அறிவாளிகள். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ளும் மனப் பக்குவத்தில் உள்ளனர்.

அதனால் இதுபற்றிய கவலையும் மனுதாரருக்கு தேவையற்றது. நீட் தேர்வை எதிர்த்து பிரச்சாரம் செய்தால், செய்துவிட்டு போகட்டும். அதனால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுபோல, பிரச்சாரம் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதும் மாணவர்களுக்கு நன்றாக தெரியும். அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. இவ்வாறு கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here