கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என பா.ம.க., தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், சென்னை அயனப்பாக்கத்தில் உள்ள கொண்டயன்கோட்டை மறவர் சங்கத்தைச் சேர்ந்த பி.பொன்பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட கேள்விகளுக்கு, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பதிலளித்திருந்தது. அதில் .
கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில், 10.50 சதவீதத்திற்கும் மேல், வன்னியர் சமூகம் பலன் பெறுகிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கமும், பாமகவும் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க ஆட்சியில், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான- எம்.பி.சி. மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வன்னியர்களின் 10.5% உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட புகாரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் ‘ஒரு சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் போது, அதற்கான சரியான, நியாயமான தரவுகளை மாநில அரசு தர வேண்டும்’ என்றது.
அப்போது தமிழக அரசு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் ‘வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது, வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம், வன்மத்தால் உள் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.
“திமுகவின் இந்தத் திட்டங்களைப் பற்றி பாட்டாளி மக்கள் நன்கு அறிவார்கள். நேரம் வரும்போது, சமூக நீதிக்கு எதிராக, நன்றி கெட்ட திமுகவுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்,” எனவும் எச்சரித்தார்.