தேர்தலில் அதிமுக, பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் ஜூன் 4ஆம் தேதி பார்ப்போம். மேலும், எந்தக் கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என தெரியவரும் என அண்ணாமலை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக காரைக்குடி கானாடுகாத்தான் கால்நடை பண்ணையில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோயிலில் சாமி தரிசனத்திற்கு பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா திருச்சி சென்றடைந்தார். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாலை, மோசமான வானிலை காரணமாக அமித்ஷாவின் பயணம் தடை பட்டிருந்தது. தற்போது தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் கோயிலில் தரிசனம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர். தற்போது தனியார் அமைப்பு அழைப்பின் பேரிலேயே பிரதமர் அங்கு வந்துள்ளார். அதனால் தான் கட்சியினர் யாரும் அங்கு செல்லவில்லை என தெரிவித்தார். மோடி, அமித் ஷா ஆகிய இரு பெரும் தலைவர்களும் தேர்தல் தொடக்கத்திலும், முடிவிலும் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அதனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கும் என கூறினார். இதனை தொடர்ந்து தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என அதிமுகவினர் விமர்சித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, எந்தக் கட்சி இருக்கும், எது காணாமல் போகும் என்பது ஜூன் 4-ம் தேதி முடிவிற்க்கு பின் தெரியும் என கூறினார்.
தேர்தலில் அதிமுக, பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் ஜூன் 4ஆம் தேதி பார்ப்போம். மேலும், எந்தக் கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்பதை பார்ப்பீர்கள் என கூறிய அண்ணாமலை, விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும் என்பர். அதனால் அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர் என தெரிவித்தார். மக்கள் மன்றத்தில் இந்துத்துவா குறித்து விவாதம் நடப்பது சந்தோஷம்தான். இதன்மூலம் இந்துத்துவா குறித்த உண்மையான விளக்கம் வெளியே வரட்டும். இந்து யாருக்கும் எதிரி கிடையாது. இஸ்லாம், கிறிஸ்துவத்துக்கு எதிரி என்று கூறுபவர்கள் இந்துத்துவவாதியே கிடையாது என அண்ணாமலை தெரிவித்தார்.