இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 32,595 மெகாவாட்டாக இருந்த மொத்த மின் நிறுவு திறன், தற்போது 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள், 34,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10,779 மெகாவாட் நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின்தடை இல்லாத மாநிலமாக திகழ்கிறது தமிழகம்.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், மின்கட்டமைப்பு ஏப்.30ல் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், மே 2ல் 20.830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்வித தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசு. மூன்று ஆண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின்விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த அரசை பாராட்டுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.