வங்கக் கடலில் நிலவிய ‘அக்வான்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது 20-ம் தேதி, வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், வரும் 23-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கக் கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அக்வான்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது. தற்போது இது, சென்னைக்கு கிழக்கே 570 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.20-ம் தேதி நண்பகலில் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நரசாபூர் மற்றும் புரிக்கு இடையே தீவிரப் புயலாக கடக்கக்கூடும். அப்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் நாளையும் (நவ.19), நாளை மறுதினமும் தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 22-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23-ம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆயிக்குடி, தென்காசி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

