‘ராசிமணல் அணை கட்டுவதற்கு கர்நாடகா ஒத்துழைக்க வேண்டும்’ – பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

Priya
709 Views
1 Min Read

மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, இரு மாநில எல்லையில் உள்ள ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.

ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேகேதாட்டு அணை கட்டுவதற்கான சட்டவிரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்த கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இந்தத் திட்டத்தால் கர்நாடக விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இதை உணர்ந்து இரு மாநில விவசாயிகளும் இணைந்து ராசிமணல் பகுதியை நேரில் ஆய்வு செய்ததுடன், மைசூருவில் ஆலோசனை நடத்தி மேகேதாட்டு திட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

எனவே, மேகேதாட்டில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, இருமாநில எல்லையையொட்டியுள்ள ராசிமணல் பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு ஒத்துழைக்க வேண்டும். அணை கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிப்பதைத் தடுக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை, அணை கட்டுவதற்கான அனுமதியாக கர்நாடக அரசு தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் சென்னை உள்ளிட்ட 32 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, கர்நாடகா அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply