டிசி ஸ்டுடியோஸின் தலைமை பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் கன் விலகல்

Priya
706 Views
1 Min Read

டிசி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சப்ரான் ஆகியோர் தங்களது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, மார்வெல் ஸ்டுடியோஸின் முன்னாள் மூத்த நிர்வாகியான ஜெரமி லாட்சாம் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிசம்பர் 1 முதல் இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக டிசி ஸ்டுடியோஸை வழிநடத்திய ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சப்ரான், நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விலகினாலும், படைப்பாக்க ரீதியிலும் திரைப்பட தயாரிப்பிலும் தொடர்ந்து டிசியுடன் இணைந்திருப்பார்கள்.

இவர்களது நிர்வாகத்தில் ‘சூப்பர்மேன்’, ‘சூப்பர்கேர்ள்’, ‘கிளேஃபேஸ்’ ஆகிய திரைப்படங்களும், ‘தி பெங்குவின்’, ‘பீஸ்மேக்கர் சீசன் 2’, ‘லேன்டர்ன்ஸ்’ ஆகிய தொடர்களும் உருவாக்கப்பட்டு கவனம் பெற்றன. இவர்களது அடுத்த படைப்பான ‘மேன் ஆஃப் டுமாரோ’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ‘தி பேட்மேன்: பார்ட் 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாக இவர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள்.

2004-ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோஸில் இணைந்து ‘அயர்ன் மேன்’, ‘தி அவெஞ்சர்ஸ்’, ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கமிங்’ மற்றும் 2014-இல் ஜேம்ஸ் கன்னுடன் இணைந்து ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர் ஜெரமி லாட்சாம்.

டிசி ஸ்டுடியோஸின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் ஜெரமி லாட்சாம், டிசியின் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் அனிமேஷன் திட்டங்களின் தயாரிப்பு மற்றும் படைப்பாக்கப் பணிகளை முழுமையாக மேற்பார்வையிடுவார். புதிய பொறுப்பு குறித்துப் பேசிய அவர், உலகளவில் புகழ்பெற்ற டிசி கதாபாத்திரங்களின் கதைகளை அடுத்த தலைமுறை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது தமக்குக் கிடைத்துள்ள மாபெரும் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply