பெட்ரோலில் கூடுதல் எத்தனால் கலப்பு: நடவடிக்கை எப்போது? – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

Priya
788 Views
3 Min Read

கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு சுமார் 31.2 சதவீதம் வரை உள்ளதாக அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு முடிவை வெளியிட்டு அதிர்ச்சித் தகவலை பகிர்ந்தது. இந்நிலையில், அதன் மீது மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இ20 பெட்ரோல் இப்போது 420 (மோசடி) ஆகிவிட்டது. பொது மக்களின் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறது. பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு கூறி வருகிறது.

இந்தச் சூழலில் கர்நாடக மாநில அரசு, அந்த மாநிலத்தில் 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரியை சேகரித்து, அதனை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் 14 மாதிரிகளில் 11-ல் எத்தனால் கலப்பு விகிதம் 20 சதவீதத்துக்கும் கூடுதலாக இருந்தது தெரியவந்தது.

இதைச் சற்று மாற்றிச் சொல்ல வேண்டும் என்றால் வாகன ஓட்டிகள் விலை உயர்ந்த பெட்ரோலுக்கான தொகையை செலுத்தினாலும் வாகனங்களில் என்னவோ எத்தனால் தான் செலுத்தப்படுகிறது. பெட்ரோல் நிலையங்களில் அது குறித்த விவரங்களும் இல்லை. அதனால் வாகனங்களில் என்ன நிரப்படுகிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை.

நமது வாகனங்களில் நிரப்பப்படும் எரிபொருள் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி நமக்கு சொல்ல வேண்டும். பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் உள்ளது? பெட்ரோலில் 20 சதவீதத்துக்கும் கூடுதலாக எத்தனாலை கலந்து விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

அதோடு பொது வெளியில் உங்களுடன் விவாதம் செய்ய நான் சவால் விடுத்திருந்தேன். அது அப்படியே உள்ளது. அதில் இந்த விவகாரத்தையும் விவாதிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

கர்நாடக மாநிலத்தில் இ20 பெட்ரோலில் சுமார் 31.2 சதவீதம் வரை எத்தனால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை அம்மாநில அரசு பகிர்ந்துள்ளது.

ஆய்வின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை அம்மாநில உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை முன்வைத்துள்ளது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் வெவ்வேறு எண்ணெய் நிறுவனங்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 63 மாதிரிகளை சேகரித்த அளவியல் பிரிவு அதிகாரிகள் அதனை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அதில் தான் பெட்ரோலில் எத்தனால் கலப்பின சதவீதம் 31.2% வரை இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. முதலில் இது குறித்து பெட்ரோல் விற்பனை செய்த எண்ணெய் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அரசு தரப்புக்கு தெளிவான பதில் கிடைக்காத நிலையில் தனியார் ஆய்வகங்களுக்கு இந்த மாதிரியை அனுப்பியதில் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.

சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளில் எத்தனால் கலப்பின் விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் இருந்தது தெரியவந்துள்ளது. பெங்களூரு, கோலார், சிக்கபல்லபுரா, துமகுரு, உத்தர கன்னடா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவதே இ20 பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது.

மாசு குறைவு, எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும், அதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வலுவடையும் என தகவல்.

பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை வரும் 2030-ல் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இ20 பெட்ரோல் விற்பனை இந்தியாவில் தொடங்கியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply