தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கலுக்கு ரிலீஸ்

Priya
981 Views
1 Min Read

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

படத்தின் வெளியீடு குறித்த தகவலை டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கான தேதி முடிவாகி உள்ளது. இந்தப் பொங்கலுக்கு பக்கங்கள் புரட்டப்பட இருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இதில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் பி ஷெட்டி இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தியாகராஜன் குமாரராஜாவுகும் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா படத்தின் இசைப் பணிகளில் இருந்து விலகிக் கொள்ள, ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆண்ட்ரூ லூயிஸ் கதை மற்றும் திரைக்கதை எழுதி இருக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணியினை சத்தியராஜ் நடராஜன் மேற்கொண்டுள்ளார். டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் கீழ் தியாகராஜன் குமாரராஜாவே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply