“காசிமேட்டில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 9 மீனவர்களை காப்பாற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. எஞ்சிய மீனவர்களை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்.29-ம் தேதி விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், ஆந்திரக் கடற்பகுதியில் புயலில் சிக்கிக் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவ.3-ம் தேதி அதிகாலை படகிலிருந்து அபாயத் தகவல் கிடைத்த நிலையில், ஆந்திர மாநிலம் ஒங்கோல் அருகே 4 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த உடல்கள் காணாமல் போன மீனவர்களுடையவைதானா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மீதமுள்ள 9 மீனவர்களின் நிலையும் இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. மீனவர்கள் ஆபத்தில் சிக்கியதாகத் தகவல் கிடைத்தும், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதில் அரசுக்கு ஏன் காலதாமதம் ஏற்பட்டது?
அபாயத் தகவல் கிடைத்தவுடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் அதிகாரிகளும் நேரடியாகத் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
4 உடல்கள் கரை ஒதுங்கியதாகச் செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் அடையாளத்தை உறுதிப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? மீதமுள்ள 5 மீனவர்களைக் கண்டறியத் தேடுதல் பணிகள் எந்த அளவில் நடைபெறுகின்றன?
இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தல், அண்டை மாநில மீனவர்களின் தாக்குதல், கடலில் காணாமல் போகும் அபாயம் எனத் தொடர் இன்னல்களைச் சந்திக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு போதிய அக்கறைக் காட்டாதது கடும் கண்டனத்திற்குரியது.
9 மீனவர்களின் உயிரைக் காப்பாற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டிப்பதுடன், எஞ்சிய மீனவர்களை மீட்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் அரசுப் பணியும் வழங்கவும், மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் திட்டம் வகுக்கவும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

