பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மார்ச் மாதம்தான் பத்திரப்பதிவு கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு தற்போது மேலும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் உள்ள 571 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு, வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் 7% முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் 2% நிர்வாகக் கட்டணம் என மொத்தமாக 9% வருவாய் ஒவ்வொரு பத்திரப்பதிவின் மூலமும் அரசுக்குக் கிடைத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில் வழிகாட்டி மதிப்பீட்டை அவ்வப்போது உயர்த்துவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு வருவாய் உயர்ந்தே வருகின்றது.
ஆனால், தி.மு.க. அரசு கடந்த 28.03.2024 அன்று திடீரெனப் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டுக் கட்டணத்தை எவ்வித அறிவிப்புமின்றி 3 மடங்கு உயர்த்தியதால், ஏழை மக்கள் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு முழுவதுமுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் பத்திரப்பதிவு துறையால் கருத்துகேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. அரசின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கையால் தற்போது கிராமப்புறங்களில் காலி மனைக்கு சதுர மீட்டர் ஒன்றிற்குக் கட்டணம் 340 ரூபாயிலிருந்து 540 ரூபாய் என 200 ரூபாய் அளவிற்கு உயரவுள்ளது. உயரும் பத்திரப்பதிவு கட்டணத்தை நிலத்தின் விற்பனை மதிப்பில் சேர்த்துவிடுவதால் நிலவிற்பனை பெருமுதலாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இக்கட்டண உயர்வால் ஏற்படப்போவதில்லை. ஆனால் உயில் மற்றும் பாகப்பிரிவினை செய்யும் ஏழை மக்களும், வாழ்க்கை முழுதும் அரும்பாடுபட்டு உழைத்து களைத்து சிறுக சிறுக சேர்த்த பணத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவதை வாழ்நாள் கனவாகக் கொண்டு நிலம் வாங்க முயற்சிக்கும் பாமர மக்களும்தான் இத்தகைய பத்திரப்பதிவு கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, சொத்து வரியைப் பன்மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு, பத்திரப்பதிவு கட்டணத்தையும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.