“டெல்டா மாவட்டங்களில் 70% விவசாயிகள் சன்ன ரக நெல் சாகுபடி…” – வேளாண் அமைச்சர் தகவல்

Priya
710 Views
2 Min Read

“காவிரி டெல்டா மாவட்டங்களில் 70 சதவீதம் விவசாயிகள் சன்ன ரக நெல் சாகுபடி செய்துள்ளனர்” என வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனை தொடக்க விழாவில் வேளாண்மை துறை வினோத் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பொது மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ரூ.250 மதிப்புள்ள தரமான மளிகைப் பொருட்கள் கொண்ட சிறப்புத் தொகுப்பு பண்டிகைக் காலங்களில் மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.200 விலையில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருபுவனம் கூட்டுறவு பண்டக சாலையிலும் பொது மக்களுக்கு இந்தப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அரசு அறிவித்துள்ளபடி, சன்ன ரக நெல் கொள்முதல் விலை ரூ.2,750 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பெரிய அளவில் ஊக்கமளித்துள்ளதுடன், நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விவசாயிகள் சன்ன ரக நெல்லையே சாகுபடி செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள 3,600 ஹெக்டேர் பரப்பளவில், ஏறத்தாழ 2,500 ஹெக்டேர் நிலத்தில் சம்பா பருவத்தில் சன்ன ரக நெல் மட்டுமே பயிரிடப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்குத் தேவையான சன்ன ரக விதைத் தேர்வு மற்றும் முறையான பயிர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்படும் ஏ.டி.டி. 51, 54, 58 மற்றும் 60 போன்ற உயர்தர சூப்பர் பைன் ரக நெல் வகைகளை ஆண்டுதோறும் விவசாயிகள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

குத்தகை விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்வதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply