விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு விதிமீறல் அபராதம் விதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் நெடுஞ்சாலைகளின் எதிர்காலம் குறித்த இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது: டெல்லி – மும்பை விரைவுச் சாலை உள்ளிட்ட சாலைகளில் தற்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிலருக்கு வேகமாக வாகனம் ஓட்டியதாகக் கூறி சாலையில் அபராத நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். அதற்கு மேல் சென்றாலும், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட 20 சதவீதம் வரை அதிகமாகச் சென்றால் விட்டுவிடுங்கள். அதையும் தாண்டி வேகமாகச் சென்றால் அபராதம் விதியுங்கள் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்த தொழில்துறையினர் ஆதரவளிக்க வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், வாகனங்கள் உரிய பாதையில் செல்லாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய முடியும். மேலும், இந்தியாவில் விரிவடைந்து வரும் நெடுஞ்சாலை வலையமைப்பு முழுவதும் போக்குவரத்து விதிகளைச் சிறப்பாக அமல்படுத்தவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

