பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நாளை குடியரசுத் துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64-வது குருபூஜை விழா அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று ஆன்மிக விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இன்று (அக்.29) அரசியல் விழாவாகவும், நாளை (அக்.30) குருபூஜை விழா அரசு விழாவாகவும் நடைபெறுகிறது.
அக்.30-ல் நடைபெறும் குருபூஜை விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாஜக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
தேவர் நினைவாலய நிர்வாகத்தின் சார்பில் நேற்று காலை 7 மணிக்கு ஆன்மிக விழா மங்கள இசை, கணபதி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, லட்சார்ச்சனையுடன் தேவர் குருபூஜை விழா தொடங்கியது. இதில் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் தங்கவேல், பழனி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தென்மண்டல ஜஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பசும்பொன்னில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
விழாவில் அரசியல் கட்சி மற்றும் சமுதாய அமைப்பினர் சார்பில் கூடங்கள் அமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

