ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ரயில்வேஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ரயில்வேஸ் அணி 53.3 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சுபைர் அலி 75 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 25 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்தது. பாபா இந்திரஜித் 19, ஆந்த்ரே சித்தார்த் 8 ரன்களில் ஆட்ட மிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 63.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாபா இந்திரஜித் 167 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆந்த்ரே சித்தார்த் 8, ஆதிஷ் 0, சோனு யாதவ் 0, கேப்டன் சாய் கிஷோர் 14, அஜித் ராம் 7, ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 26 ரன்களில் நடையை கட்டினர். ரயில்வேஸ் அணி தரப்பில் ராஜ் சவுத்ரி 5, தவுஃபிக் உத்தின் மொண்டல் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
19 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ரயில்வேஸ் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 51 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஹாப் யுவராஜ் சிங் 42, ரவி சிங் 19, தவுஃபிக் உத்தின் மொண்டல் 11, ஜூபைர் அலி 10 ரன்கள் சேர்த்தனர்.
ரத்யும்ன் பரிக் 2, ஹிமான்ஷு சங்க்வான் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 4, ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ரயில்வேஸ் அணி கைவசம் ஒரு விக்கெட் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

