“பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக உரிமைப் போராட்டங்கள் தொடரும்” – சீமான்

Priya
757 Views
1 Min Read

நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது தொடர்பாக, ‘பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிரான எங்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து வெல்லும்’ என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டெல்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகள், கரூர் நன்மாறன் திருப்பூர் வழக்கறிஞர்கள் சரவணன், சிராஜுதீன், நத்தம் சிவசங்கரன் உள்ளிட்டோருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply