மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கைது அதிகாரங்களை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், தவறு இழைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான குறைந்தபட்ச வரிஏய்ப்பு வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்படியான குறைந்தபட்ச தண்டனை என்பது நீக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வோர் வழக்கிலும் அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படுவதை நீதிமன்றத்தின் முடிவிற்கே விட்டுவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு குறிப்பிட்ட அபராதமும் குறிப்பிடப்படாத பொதுவான தவறுகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.10,000 ஆக குறைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம், வரி செலுத்துபவர் தாமதமாகத் தாக்கல் செய்தாலோ, தவறு செய்தாலோ அல்லது பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ, வரி வசூல், வட்டி மற்றும் அதற்குரிய அபராதம் மட்டுமே விதிக்கப்படும். அதைத் தாண்டி கைது போன்ற எந்தவிதக் கடுமையான நடவடிக்கைகளும் இருக்காது.
நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையான வரி நடைமுறைகள் குறித்துப் புகார் தெரிவித்து வந்ததுடன், சுலபமாகத் தொழில் செய்வதற்கான சூழலை உருவாக்கக் கோரிக்கை விடுத்திருந்தன. அந்த அடிப்படையில் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்களைச் செய்வதை விட, தொழில் செய்வதை எளிதாக்குவது மற்றும் தொழில் நிறுவனங்களின் வரி விதிப்புச் சுமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட செயல்முறை சார்ந்த சீர்திருத்தங்களிலேயே ஜிஎஸ்டி கவுன்சில் அதிக கவனம் செலுத்தியுள்ளது” என்றார்.

