செவிலியர்களின் உரிமைக்குரலை காப்பது அரசின் கடமை..! கைது நடவடிக்கைக்கு பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம்

Priya
699 Views
1 Min Read

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடிய செவிலியர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கையாண்டு கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ” மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் செவிலியர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜனநாயக வழியில் போராடியுள்ளனர்.

குறிப்பாக கொரோனா காலத்தில் நம் உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரை காப்பாற்றிய “Nightingale”. அவர்களுடைய கோரிக்கையை இந்த அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டியது கடமை.

பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர் பிரதிநிதிகளை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய செவிலியர்களை இரவு நேரத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை.

செவிலியர்களின் குரலை காவல்துறை நடவடிக்கைகளால் அடக்க முயல்வதை விடுத்து, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு உடனடியாக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். “சம வேலைக்குச் சம ஊதியம்” உள்ளிட்ட அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் பரிசீலித்து, நியாயமான தீர்வை விரைந்து வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் நம் உயிரைக் காத்த செவிலியர்களின் உரிமைக்குரலை இன்று நாம் காப்பது நமது கடமை” என்று வலியுறுத்தி உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply