மேற்கு வங்கத்தில் தவெக கிளை துவக்கம்: அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை விரிவுபடுத்த திட்டம்

Priya
792 Views
1 Min Read

தமிழகத்தின் ஆளும் கட்சியான தவெகவின் கிளை மேற்கு வங்க மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. கட்சியின் கிளைகளை மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் துவக்கி கட்சியை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதல் அமைச்சர் விஜய்யின் தவெக, மேற்கு வங்க மாநிலத்தில் தனது முதல் கட்சி அலுவலகத்தைத் திறந்துள்ளது. இது, கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுபூர் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த புதிய அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதன் மாநில நிர்வாகிகளாக மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞய்.டி மற்றும் பல்வேறு மாவட்ட தவெகவின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பகுபூரின் தவெக கட்சி அலுவகத் திறப்பு விழா மேடையில் முதல்வர் விஜய்யின் பல்வேறு படங்கள் பெரிதாக மாட்டப்பட்டிருந்தன. தமிழக அமைச்சரும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஒரு படமும் மேடையை அலங்கரித்தது.

சுமார் 40 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அனைவரது தோள்களிலும் தவெக கட்சி நிறத்திலான துண்டுகள் தொங்கின. இவர்களில் பெரும்பாலானவர் இளைஞர்களாகவும், மீதியுள்ள ஒருசிலர் நடுத்தர வயதை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜகவின் முதல்வராக சுவந்து அதிகாரி உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply