ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்தது திமுக: முதல்வர் விஜய் பேச்சு @ மதுராந்தகம்

Priya
730 Views
4 Min Read

“தமிழகத்தில் இளம்பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருவன் இத்தனை ஆண்டுகளாக சீரழித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளார்கள். இதுபற்றி தமிழகமே கேள்வி கேட்கிறது, வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்” என ஜெம் வீரமணி விவகாரத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுராந்தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, தொழுப்​பேடு பகு​தி​யில் நடக்கும் பிரச்​சா​ரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் விஜய், “ நான் இங்கு முதல்வராக வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டுக் கேட்டு உங்கள் வீட்டு பிள்ளையாக வந்துள்ளேன். ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா? தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா? பிறகு ஏன் இந்த தீயசக்தி திமுக நம்மை பார்த்து தினம் தினம் ஆபாசமாக பேசுகிறது.

நாட்டில் இப்போது ஒரே ஆபாசநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் வெற்றி பெற்றதற்கு மக்கள் தான் காரணம். அன்று ஜெயலலிதாவை ஸ்டாலின் அவதூறாக பேசினார். இப்போது அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அவ்வாறு பேசும் திமுகவுக்கு அதிமுக மறைமுகமாக ஆதரவளிக்கிறது.

ஜெயலலிதாவை அவமதித்த திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தபோதே அதிமுகவின் முகமூடி கிழிந்துவிட்டது. மதுராந்தகத்தில் என் தங்கைக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். விசிலுக்கு வாக்களிப்பது என்பது பெண்களை அசிங்கமாக, ஆபாசமாக பேசுவோருக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ வாக்களித்தால் அது பெண்களை ஆபாசமாக பேசுவதை ஆதரிப்பதாக மாறிவிடும். நம் வீட்டு பெண்களை இவ்வாறு பேசுபவர்களை சும்மா விடக்கூடாது.

108 இடங்களில் வென்ற நாம் ஆட்சியமைக்க கூடாது என திமுக, அதிமுகவும் ஒரு கூத்து நடத்தினார்கள். அதிமுக பாஜகவின் ஒரு பிரிவு, ஆனால் இப்போது அதிமுக திமுகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. மக்கள் காசை கொள்ளை அடித்தவர்கள் ஆட்சிக்கு வரலாம், சாமானியர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள்.

விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊழல் செய்யமுடியாது, கொள்ளை அடிக்க முடியாது என திமுகவும், அதிமுகவும் திட்டம் போட்டார்கள். இதனையே ஐயுஎம்எல் சட்டப்பேரவையில் சொன்னார்கள். எனவேதான் திமுக செய்த ஊழல்களை சட்டப்பேரவையில் சொன்னேன். சட்டப்பேரவையில் ஊழல் என சொல்லிவிட்டால், திமுகவினர் ஆதாரத்தை காட்டச் சொல்வார்கள். ஆதாரம் காட்டினால், அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பார்கள். நீதிமன்றத்தில் உள்ளதை பேசக்கூடாது என்பார்கள். நான் பேச்சை ஆரம்பிக்கும் போது கூட்டமாக சத்தம் போடுவார்கள். அவர்களின் நோக்கம் என்னை பேசவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது. அதனால் தான் நான் சத்தமாக பேச வேண்டியுள்ளது.

ஊழல் செய்த கூட்டத்தை விடவே மாட்டோம் என திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சொல்லிக்கொள்கிறேன். இதுவரை ஊழலே செய்ததில்லை என திமுகவால் சொல்ல முடியுமா? இனிமேல் ஊழலே செய்யமாட்டேன் என திமுகவால் சொல்ல முடியுமா? எப்படி பார்த்தாலும் இரண்டே பேருக்கும் இடையேதான் போட்டி. தீய சக்தி திமுகவுக்கும், தூயசக்தி தவெகவுக்கும் இடையேதான் போட்டி. எனது கேள்வி எப்போதும் ஸ்டாலினுக்குதான்.

நான் ஒரு பாலத்தில் ஆய்வு செய்ய சென்றால், அது நாங்கள் கட்டியது என திமுக சொல்கிறது. அந்தப் பாலத்தை உங்கள் வீட்டில் காசில் கட்டினீர்களா ஸ்டாலின் சார்? உங்களிடம்தான் சொந்தமாக கார் கூட இல்லையே சார்? முதல்வர் என்பவர் மக்களின் வேலைக்காரன். முதல்வர் என்றால் மக்களின் முதலாளி கிடையாது. தமிழகத்துக்கு நீங்கள்தான் முதலாளி போல பேசுகிறீர்கள்.

தவெக ஆட்சியை குறுக்கு வழியில் கவிழ்க்க திமுக திட்டம் போடுகிறது. தவெக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. ஆட்சியமைக்கும் போது மக்களிடம் அவகாசம் கேட்டேன். இப்போது விஜய் அரசும் கடன் தான் வாங்குகிறது என்கிறார்கள். நான் மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன், கொள்ளையடிக்க அல்ல. ஆறு சிலிண்டர் தருவதாக சொன்னேன், இப்போது நிதிநிலையை கருத்தில் கொண்டு 3 சிலிண்டர் தந்துள்ளேன். இதனை விமர்சித்து வருகிறார்கள்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தீயசக்தி என சொன்ன திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க அதிமுக முயற்சி செய்ததால் அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் மனவலி ஏற்பட்டது. இதனால்தான் மரகதம் குமரவேல் நம்மிடம் வந்து சேர்ந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல எனக்கும் திமுக தான் எதிரி.

எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவார்கள். இப்போது என்ன ஆச்சு, பாஜகவே மூச்சுவிட திணறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல. டெல்லியில் உள்ள திமுகவுக்கு பெயர் பாஜக, தமிழகத்தில் உள்ள பாஜகவுக்கு பெயர்தான் திமுக. எப்போது தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப வரும், எப்போது பாஜகவுடன் சேரலாம் என திமுக காத்துக்கொண்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக வென்றுவிட்டால், ஜனவரி மாதத்தில் தவெக ஆட்சி கலையும் என திமுக பேசுகிறது. திமுக, பாஜக, அதிமுக எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

இந்த விஜய்யையும், விஜய் கூட உள்ள மக்களையும் தொடாதீர்கள். அப்புறம் ஏன் தொட்டோம் என காலத்துக்கும் புலம்புவீர்கள். நம் மீது எந்தக் குற்றச்சாட்டு வைக்க முடியவில்லை என்ற விரக்தியில், தமிழக பெண்களை அசிங்கமாக திமுக பேசுகிறது. இதனை ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கிறார்கள்.

தமிழகத்தில் இளம்பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருவன் இத்தனை ஆண்டுகளாக சீரழித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளார்கள். இதுபற்றி தமிழகமே கேள்வி கேட்கிறது, வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார். இந்த விவகாரத்தில் அதிமுகவும் வாயை திறக்கவில்லை. இதில் கூடவா கூட்டு?

பெண்கள் பாதுகாப்புக்கே பிறந்தது போல பேசும் திமுக, அதிமுகவும், அந்த ஆளைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால் அந்தக் குற்றவாளியை உள்ளே தூக்கி வைத்துவிட்டோம். பச்சைப் பிள்ளைகளின் வலியை பேச முடியவில்லை என்றால் என்ன அரசியல் செய்கிறீர்கள். எனவே, இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply