பாடத்திட்டம் உருவாக்குவதில் தொழில்துறையினர் பங்கேற்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் வலியுறுத்தினார்.
இந்திய தொழில்கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் கல்வி-தொழில்நுட்பம் தொடர்பான 3 நாள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
இக்கண்காட்சியை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது: கல்வியையும் தொழில்நுட்பத்தையும் தனித்தனியே பார்க்க முடியாது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, நேரடி அனுபவ கற்றல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி ஆகியன மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் முறைகளை மாற்றத் தொடங்கிவிட்டன.
அந்த வகையில், தொழில்துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி செல்வோரின் விகிதம் 52.3 சதவீதமாக இருக்கிறது.
பெண்களின் சேர்க்கை விகிதம் 53.1 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 13 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் 9 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 441 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கல்வி நிறுவனங்களும் தொழில்துறையினரும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும். பாடத்திட்டத்தை உருவாக்குவதில் தொழில்துறையினர் பங்கேற்க வேண்டும். தொழில்துறை நிபுணர்கள் கல்லூரிகளுக்கு கவுரவ ஆசிரியர்களாக வருகை தந்து பாடம் நடத்த வேண்டும்.
தொழில்துறை புராஜெக்ட்களில் பங்கேற்க மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இன்டன்ஷிப், அப்ரன்டீஸ் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், “பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளன. எனவே அதுகுறித்து தற்போது விரிவாக விவாதிக்க முடியாது.
துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில், ஒருங்கிணைப்புக்குழு மூலம் இடைக்கால நிர்வாக ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூடி, மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, அதிலிருந்து ஒரு மூத்த பேராசிரியரை தேர்வு செய்து, துணைவேந்தருக்குரிய அதிகாரங்களுடன் செயல்படும் வகையில் நியமனம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்த நடைமுறை மூலம் பொறுப்பு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 11 பல்கலைக்கழகங்களில் பொறுப்பு துணைவேந்தர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்” என்றார்.

