பணிப் பலன்கள், கலந்தாய்வு இடமாறுதல், பணி நீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறநிலையத்துறை ஆணையரிடம் கோயில் பணியாளர்கள் மனு அளித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு நிர்வாக ரீதியிலான ஜீவாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய்யிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தூய்மைப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள நடைமுறை இடர்பாடுகளை ஆணையர் மற்றும் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்குப் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்.
எந்தவொரு முன்விசாரணையும் மேற்கொள்ளாமல் ஊழியர்கள் மீது துறை ரீதியான அவசர நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது.
வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
துறை ரீதியாகக் கேட்கப்படும் புள்ளிவிவரங்களைத் திரட்டி வழங்க அலுவலர்களுக்குப் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பணியாளர்களின் பணி நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்து, செயல் அலுவலர்களுக்கு மீண்டும் பணியிடம் வழங்கிட வேண்டும்.
கோயில் பணித்தொகுதியை செயல் அலுவலர்கள் கட்டுப்படுத்தும் வகையில், உடனடியாகச் சட்டப்பிரிவு 56-ல் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு அளிக்கும் போது, நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் க.ஜெகநாதன், மாநிலப் பொதுச்செயலாளர் நா. ரமேஷ், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சு.தனசேகர், தலைமைச் செயலாளர் தாம்பரம் ரமேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செயல் அலுவலர்களும், கோயில் பணியாளர்களும் திரளாக உடனிருந்தனர்.

