ரூ.1-க்கு இட்லி விற்கும் மூதாட்டிக்கு மீண்டும் இலவச சிலிண்டர்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Priya
709 Views
2 Min Read

கோவையில் ரூ.1-க்கு இட்லி விற்கும் மூதாட்டிக்கு இனி தடையின்றி கட்டணமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே போளுவாம்பட்டியைச் சேர்ந்தவர் கமலாத்தாள்(90). இவர், அதேப் பகுதியில் சிறியளவில் கடை அமைத்து, 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். சட்னி, சாம்பாருடன் அவர் தரும் குறைந்த விலையிலான இட்லிக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர், லாப நோக்கமின்றி இட்லி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். முதலில் விறகு அடுப்பு மூலமாக சமைத்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக காஸ் அடுப்பில் சமைத்து வருகிறார். இதற்காக எரிவாயு ஏஜென்சி நிறுவனத்தினர் இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக, இவரது கடைக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காஸ் சிலி்ண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், விறகு அடுப்பின் மூலம் இட்லி தயாரிக்க முடியாமல் மூதாட்டி சிரமப்பட்டு வந்தார்.

இந்நிலையில், மீண்டும் இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்க வலியுறுத்தி, மூதாட்டி கமலாத்தாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்.21) நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமின் போது அதிகாரிகளிடம் மனு அளித்தார். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட வழங்கல் துறைக்கு ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் குறித்து கேள்விப்பட்ட, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமாரும் உரிய நடவடிக்கை எடுத்து இலவச சிலிண்டர் விநியோகிக்க அறிவுறுத்தினார். அதையடுத்து வழங்கல் துறையினர் விசாரித்து, மீண்டும் இலவசமாக காஸ் சிலிண்டரை மூதாட்டிக்கு வழங்க ஏற்பாடு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, வழங்கல் துறை அதிகாரிகள் முன்னிலையில், சிலிண்டர் ஏஜென்சி நிறுவனத்தின் ஊழியர்கள் இலவச காஸ் சிலிண்டரை மூதாட்டி கமலாத்தாள் கடைக்கு இன்று (செப்.22) காலை விநியோகித்தனர். இனி தடையின்றி மூதாட்டிக்கு கட்டணமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply